சிறுத்தை புலி நடமாட்டம்

சென்னிமலை அருகே இரவில் சிறுத்தை புலி நடமாடியதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் இருந்தனர்;

Update: 2025-03-24 10:29 GMT
சென்னிமலை அருகே இரவில் சிறுத்தை புலி நடமாடியதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் இருந்தனர். சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டிக்குள் அடிக்கடி மர்ம விலங்கு புகுந்து ஆட்டை கடித்து கொன்று அதன் உடலை கொண்டு சென்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. பின்னர் அங்கு நிலத்தில் பதிவான அந்த மர்ம விலங்கின் தடயத்தை பார்த்தபோது சிறுத்தை புலியின் கால் தடம் என தெரிய வந்தது. ஏற்கனவே சென்னிமலை வனப்பகுதி விலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதியென வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் சென்னிமலை அருகே நல்லபாளி திருமலை நகர் பகுதியில் சிறுத்தை புலி ஓடியதாக தகவல் பரவியது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த தகவல் பரவியதால் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து விடிய, விடிய தூங்காமல் வீட்டுக்குள்ளே இருந்தனர். மேலும் இதுகுறித்து சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னிமலை வன காவலர் முருகன் மற்றும் வனத்துறையினர் திருமலை நகருக்கு சென்று நள்ளிரவு 2 மணி முதல் நேற்று காலை வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை புலி எதுவும் வனத்துறை இனருக்கு கண்ணில் படவில்லை. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News