மாரியம்மன் திருவிழா
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறாக கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன.;
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறாக கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன. அதிகாலையில் இருந்தே கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற பக்தர்கள் குவிந்தனர். பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வரிசையாக நிற்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர். ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதேபோல் காவிரிக்கரையில் இருந்தும், பல்வேறு கோவில்களில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பக்தி கோஷம் முழங்க கம்பத்துக்கு புனிதநீர், பால் ஊற்றி வழிபட்டனர். கோவிலின் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் கம்பத்துக்கு ஏராளமான பக்தர்கள் புனிதநீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவையொட்டி பக்தர்கள் அன்னதானமும், கம்பங்கூழ் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், 2-ந் தேதி காலை 9 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கிறது. 3-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதிஉலா செல்கிறார். 4-ந் தேதி இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மனும், 9.30 மணிக்கு சின்ன மாரியம்மனும் மலர் பல்லக்கில் எழுந்தருளி திருவீதிஉலா செல்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா 5-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடக்கிறது. 3 கோவில்களிலும் நடப்பட்ட கம்பங்கள் எடுக்கப்பட்டு மணிக்கூண்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து தொடங்கும் கம்பம் ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர்ரோடு, சத்திரோடு வழியாக காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, காலிங்கராயன் வாய்க்காலில் விடப்படுகிறது. அன்றைய தினம் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் தண்ணீரை ஊற்றி மகிழ்வார்கள். 6-ந் தேி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.