இழப்பீடு வழங்கப்படும்
ஈரோடு பெரியார்நகரில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபகாலமாக தெருநாய்கள் ஆடு, கோழிகளை கடித்து குதறி கொன்றது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் இழப்பீடு வழங்கக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தெருநாய்கள் கால்நடைகளை கடித்து கொன்றால், ஆட்டுக்கு ரூ.6 ஆயிரமும், கோழிக்கு ரூ.200-ம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகரில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடத்த நடவடிக்கை, தெருநாய்களில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பாக கண்காணிப்பது குறித்து பேசினார். தொடர்ந்து, இழப்பீடு பெற்றுக்கொடுக்க உதவியாக இருந்த அமைச்சர் முத்துசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தெருநாய்கள் கடித்து குதறியதில் கால்நடைகள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்திருந்தார். இதனால் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீட்டை அவர் அறிவித்தார். தெருநாய்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அரசின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் சட்ட விதிகள், கோர்ட்டு உத்தரவின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் நேரு தெரிவித்தார். இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழக பட்ஜெட்டில் தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தெருநாய்களின் பாதிப்பு அதிகமாக உள்ள 100 இடங்களில் கருத்தடை மையம் அமைக்கப்பட உள்ளது. அதேசமயம் தெருநாய்களில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற விவசாயிகளும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் தெருநாய்களில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற முடியும். இதை தவறாக நினைக்க வேண்டாம். உங்களில் ஒருவராக நினைத்து நான் சொல்கிறேன். ஆட்டு பட்டியை சிறப்பாக அமைத்துவிட்டு, கதவை கயிறுகளால் கட்டி இருந்ததால் தெருநாய்களை உள்ளே புகுந்து ஆடுகளை வேட்டையாடியதை காண முடிந்தது. விவசாயிகளுக்கு மாதிரி பட்டியை அமைத்து காண்பித்து உள்ளோம். அதுபோல் பட்டி அமைத்து கால்நடைகளை வளர்க்கலாம்.இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.