திருச்சி : மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு
திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.;

திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இங்கு பயிலும் மாணவா்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதாகவும் புகாா் கூறப்பட்டது. மேலும், வகுப்பறைகளில் ஆசிரியா் இல்லாத நேரங்களில் அல்லது மாறி வரும் இடைவெளியில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு தாளம் போடுவது, தகாத வாா்த்தைகளைக்கூறி கூச்சலிடுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் பலமுறை கூறியும், அவா் அதைக் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்துள்ளாா். இந்நிலையில், இந்தச் செயலைக் கண்டிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து குடியிருப்புவாசிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். இதிலும் தீா்வு எட்டப்படாததால், பொன்மலை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், இதுபோன்ற செயல்களில் நடவடிக்கை எடுக்காத ஆசிரியா்கள் மற்றும் தொடா்புடைய மாணவா்கள் மீதும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.