புதுக்கோட்டை:போலீஸ் விசாரணைக்கு வந்தவர் வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை!
துயரச் செய்திகள்;

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(40) மற்றும் சிலருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணைக்காக மகேந்திரனை கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் இரவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீடு திரும்பிய மகேந்திரன் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தன்னை போலீசார் அழைத்து சென்று அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தனது சகோதரியிடம் வருந்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்ததும் கறம்பக்குடி போலீசார் விரைந்து சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவத்தை கண்டித்து கிராமமக்கள் போராட்டம் நடத்தப்போவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கறம்பக்குடி, பட்டத்திக்காடு உள்ளிட்ட பகுதியில் ஏடிஎஸ்பி சுப்பையாதலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.