சாலை -- கால்வாய் தடுப்பு இடையே பள்ளம் மண் நிரப்பாததால் விபத்து அபாயம்

மஞ்சள்நீர் கால்வாயின் தடுப்புச்சுவருக்கும், சாலைக்கும் இடையே உள்ள இடைவெளி பள்ளத்தில் மண்ணை நிரப்பி சமன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது;

Update: 2025-04-15 07:37 GMT
சாலை -- கால்வாய் தடுப்பு இடையே பள்ளம் மண் நிரப்பாததால் விபத்து அபாயம்
  • whatsapp icon
காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட, மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. இக்கால்வாயின் தடுப்புச்சுவர் சேதமடைந்து இருந்ததால், 40 கோடி ரூபாய் செலவில், புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் காமராஜர் வீதிக்கும், சங்கூசாபேட்டைக்கும் இடையே உள்ள பாவாஜி தெருவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முன் இருந்த கால்வாயின் அகலத்தைவிட தற்போது அகலம் குறைவாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால், சாலைக்கும் தடுப்புச்சுவருக்கும் இடையே இடைவெளியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் செல்லும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்டடை குறுகிய இடைவெளி உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்தால், பள்ளத்தில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பாவாஜி தெருவில், மஞ்சள்நீர் கால்வாயின் தடுப்புச்சுவருக்கும், சாலைக்கும் இடையே உள்ள இடைவெளி பள்ளத்தில் மண்ணை நிரப்பி சமன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News