மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்:
மணல் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை;
தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். பின்னர் இது குறித்து மாவட்ட செயலாளர் கண்ணையன் கூறுகையில், தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி தரம் இல்லாத எம்.சாண்ட் பன்மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள 4,500 குவாரிகளில் 400க்கும் மேற்பட்ட குவாரிகள் தரச்சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட குவாரிகளின் அனுமதி காலம் முடிந்தும், சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது ஆறுகளில் மணல் அதிகளவு தேங்கியுள்ளதால், மழை வந்தால் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். இதே போல், மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடையால் மணல் லாரி உரிமையாளர்கள் சிறிய அளவில் எம்.சாண்டை வாங்கி பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். பெரிய அளவில் குடோன் அமைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாரமங்கலத்தில் விதிகளை மீறி எம்.சாண்ட் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சேமிப்பு கிடங்கை அகற்ற வேண்டும் என்றார். அப்போது தலைவர் செல்வராஜ். துணை தலைவர் பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.