விஷ்ணு நகர் டாஸ்மாக் கடையால் 'குடி'மகன்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
விஷ்ணு நகரில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூட, வேண்டும் என, சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.;
சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் புறவழி சாலையான, மிலிட்டரி சாலையில், தேனம்பாக்கத்தில் இயங்கி வந்த விஷ்ணு நகர் டாஸ்மாக் கடையால், அப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியினர் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தினர், சமூக ஆர்வலகள் பலர், காஞ்சிபுரம் கலெக்டரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்தனர். இதை தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, காஞ்சிபுரம் கலெக்டர், விஷ்ணு நகர் டாஸ்மாக் கடையை மூட, கடந்த ஆண்டு அக்., மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து விஷ்ணு நகர் டாஸ்மாக் மூடப்பட்டது. இந்நிலையில், விஷ்ணு நகர் டாஸ்மாக் கடை, ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனால், வழக்கம்போல அப்பகுதியில், 'குடி'மகன்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். பெண்கள், சிறுவர்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சாலையோரம் அமர்ந்து மது அருந்துவது, இருமுனை, மும்முனை தெரு சந்திப்பில் மது அருந்துவது, அருகில் உளள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் மது அருந்துவது என, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். புறவழி சாலை என்பதால், இச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால், டாஸ்மாக் கடைக்கு செல்ல சாலையை கடந்து செல்வோர் மட்டுமின்றி, மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடி வருவோர், வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, 'குடி'மகன்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க, விஷ்ணு நகரில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூட, காஞ்சிபுரம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.