சூரமங்கலம் பகுதியை சூறைக்காற்று பனை மரங்கள் சாய்ந்து சிலிண்டர் வினியோக தொழிலாளி பலி
மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
சேலம் சூரமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சூறைக்காற்று அந்த பகுதி மக்களை கதிகலங்க செய்தது. அதாவது பயங்கர சத்தத்துடன் இந்த காற்று வீசியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் ஆங்காங்கே தடுமாறி விழுந்தனர். சாலையில் நடந்து சென்றவர்களும் கீழே விழுந்தனர். இந்த சூறைக்காற்றால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மேற்கூரையின் உள்பகுதி பெயர்ந்து விழுந்தது. சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. இதற்கிடையே சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது 2 பனை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம் அடைந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர், சூரமங்கலம் அருகே வெள்ளைய கவுண்டன் தெரு பகுதியை சேர்ந்த நடேசன் மகன் ராமதுரை (வயது 55) என்பதும், அவர் வீடு வீடாக சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இறந்த தொழிலாளியின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இறந்த ராமதுரைக்கு மீனா என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும், தர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையே அந்த பகுதியில் மின்கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து தடைபட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அந்த நேரம் அங்கு யாரும் இல்லை என்பதால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.