சேலம் சிறுமலர் பள்ளியில் தாசன் கலையரங்கம் திறப்பு விழா
சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் திறந்து வைத்தார்;
சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் தாசன் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது. சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமை தாங்கி புதிய கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி ஜெபம் செய்து திறந்து வைத்தார். பின்னர் ஆயர் சிறப்பு திருப்பலி நடத்தினார். முன்னாள் ஆயர் சிங்கராயன் கலந்து கொண்டார். பின்பு சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.செபஸ்டியான் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் முரளி, கார்த்திக் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கலையரங்கம் கட்டுவதற்கு உதவியாக இருந்த முன்னாள், இந்நாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் ஜெயம் கலை கோட்டம் சார்பில் கரகாட்டம், இசைக்கருவிகளுடன் கிராமிய நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட்டன. ஜூடித் தாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் எம்.கிறிஸ்துராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.