ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க விளையாட்டு போட்டிகள்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.;
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. அண்ணா பூங்காவில் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேறுதல், வன உயிரினங்களான யானை, புலி, முயல், மான், பாம்பு, காட்டெருமை போன்ற உருவங்களும், குழந்தைகளை கவரும் கார்ட்டூன்களான பிக்காச்சு, சார் மண்டர் மற்றும் ஒற்றை கொம்பு குதிரை, செல்பி பாயிண்ட் போன்றவைகள் பல வண்ண வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், மலர் கண்காட்சியை பார்வையிடுவதற்காக நேற்று 2-வது நாளாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்தும் குவிந்ததால் ஏற்காடு முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிரம்பின. அண்ணா பூங்கா மட்டுமின்றி ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கோடை விழாவை காணவரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று ஏற்காடு கலையரங்கத்தில் பெண்களுக்கு சமையல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.