முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் பிருந்தா தேவி தகவல்;
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் 2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடைந்து வைப்புத்தொகை ரசீது பெறப்பட்டு தற்போது 19 வயது முடிவடைந்தும் முதிர்வுத்தொகை கோரி விண்ணப்பிக்காத பெண் குழந்தைகளுக்கு உடனடியாக முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. எனவே, பயனாளிகளின் வைப்புத்தொகை ரசீது, மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிறப்பு சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் விண்ணப்பித்து முதிர்வுத்தொகை பெற்று பயன் பெறலாம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாதவர்கள் இத்திட்டத்தில் பயன் பெற இயலாது. உடல் ஊனமுற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய பயனாளிகள் 10-ம் வகுப்பினை நிறைவு செய்யாத நிலையிலும் திட்டத்தில் பயன் பெற தகுதியுடையவராகிறார். 2 பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை இறந்திருப்பின், இறந்த பெண் குழந்தையின் முதிர்வுத்தொகையை உயிருடன் உள்ள மற்றொரு பெண் குழந்தை பயன்பெற தகுதியுடையவராகிறார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.