குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து
பாலக்காடு கிராம மக்கள் சாலை மறியல்;
நாகை ஒன்றியம் வடகுடி ஊராட்சிக்குட்பட்ட பாலக்காடு கிராமத்தில், வடக்குத் தெரு, தெற்குத் தெரு, பள்ளிக்கூடத் தெரு, பகுதாயம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில், பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, வடக்குத் தெரு, தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுத்திருந்தாலும் இன்னும் குடிநீர் இணைப்பு கொடுக்காததால் குடிநீர் வரவில்லை. இதனால், பொதுமக்கள் குடிநீர் குடங்களை ஆட்டோக்களிலும், வாய்க்கால், வரப்புகள் வழியாகவும் குடிநீர் குடங்களை பெண்கள் தலையில் சுமந்து வரக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று, கமிஷனுக்காக தெருக்களில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு காட்சி பொருளாகவே உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்திற்கு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில், நாகூர், ஆழியூர் சாலையில் பாலக்காடு கிராமத்தில் 100- க்கும் மேற்பட்டோர் பேருந்தை மறித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து 🥹போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 'வடக்குத் தெரு, தெற்கு தெரு பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். ஜல் ஜீவன் குடிநீர் குழாய்களில் தண்ணீர் விட வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.