கோவை: மத்திய சிறையை வீடு போன்று மிக சிறப்பாக வைத்து உள்ளார்கள் - மதிப்பீட்டு குழு புகழாரம் !
கோவை மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்களைத் நேற்று தொடர்ச்சியாக ஆய்வு செய்த தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழுவினர், முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.;
கோவை மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்களைத் நேற்று தொடர்ச்சியாக ஆய்வு செய்த தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீடு குழுவினர், முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். குழுத் தலைவர் காந்திராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,அவிநாசி மேம்பால பணிகள் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கான பணிகள் மூன்று மாதங்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. கோவை மத்திய சிறை மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. கைதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் ஊதியமளிக்கும் வேலை வாய்ப்புகள் சிறையாகவே உள்ளன என்று பாராட்டினார். சிறை மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு-இரண்டு சம்பவங்களை வைத்து முழுமையான குற்றச்சாட்டு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். மருதமலையில் நடைபெறும் லிப்ட் அமைக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும். அங்கு தெற்காசியாவில் உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேளாண் பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்குகிறது. பூச்சி தொற்று தொடர்பாக விவசாயிகள் எடுத்து வந்த புகார்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது. தென்னை வெள்ளை பூச்சி கட்டுப்பாட்டிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேட்டுப்பாளையம் அருகே சிறை நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்படும். மலைவாழ் மக்களுக்கு கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். நொய்யல் நதி சீரமைப்பு தொடர்பாக திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார். சாலைகள் மோசமான நிலையில் உள்ளதை கண்டறிந்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், காட்டுப்பன்றி பாதிப்புக்கான நிவாரணம் கோரிக்கை அரசு கவனத்தில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.