காகிதம் கூடுதல் உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் காகித தின விழாவை ஒட்டி எஸ்.பி.பி. நிறுவன தலைவர் பேச்சு

குமாரபாளையம் ஆக.3 காகிதம் கூடுதல் உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என, காகித தின விழாவை ஒட்டி எஸ்.பி.பி. நிறுவன தலைவர் கூறினார்.;

Update: 2025-08-02 09:25 GMT
ஆண்டுதோறும் இந்தியாவில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உலக காகித தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியில் சேசசாயி காகித ஆலை செயல்பட்டு வருகிறது. காகித தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காகித ஆலையின் நிறுவனத் தலைவர் கோபாலரத்தினம் கூறியதாவது: இந்தியாவில் காகித தயாரிப்பின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டு, கடந்த 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கையால் தயாரிக்கப்படும் காகித நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் இந்திய அரசியலமைப்பின் முதல் சில பிரதிகள் அச்சிடப்பட்டதாக கூறுகின்றனர். காகிதத்தின் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை, அதன் உற்பத்தி செயல்முறை மற்றும் நீடித்த நிலையான முக்கிய உள்ளீட்டு பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி தேசிய காகித தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் காகித உற்பத்தியில் இந்திய காகித தொழில் சுமார் 5% அங்கம் வகிக்கிறது. காகிதத் தொழில் மூலம் நேரடியாக 5 லட்சம் பேருக்கும் மறைமுகமாக 15 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நமது நாட்டில் தனி நபர் காகிதம் நுகர்வு 15 கிலோவாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் சராசரி 57 கிலோவாக உள்ளது. காகிதங்கள் பொதுவாக அச்சிடும் தாள், எழுதும் தாள், செய்தித்தாள், பேக்கிங் பேப்பர், டிஷ்யூ பேப்பர் என 4 வகையாக உள்ளன. அனைத்து வகையான காகிதங்களும் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், கல்வி அறிவை பரப்புதல், செய்தித்தாள் மூலம் செய்திகளை பரப்புதல், நல்ல அழகிய பேக்கிங் மூலம் விரயத்தை குறைத்தல், ஆரோக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற உன்னத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. நமது இந்திய அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஆர்வமாக உள்ளது. இது பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித பைகள் மற்றும் உணவு தட்டுகள் உபயோகப்படுத்த கூறுகிறது. காகிதத்தின் பயன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ,வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தேசிய காகித தினம் குறித்த விழிப்புணர்வு சேசசாயி காகித ஆலை நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 800-க்கும் மேற்பட்ட காகித உற்பத்தி ஆலைகளுக்கு மூலப் பொருட்களான மரங்களை அதிக பரப்பளவில் வளர்க்க மத்திய மாநில அரசுகள் அதிக அளவிலான நிலங்களை குத்தகைக்கு வழங்க வேண்டும். ஏனெனில் இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மிக மலிவான விலையில் காகிதங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூரில் உள்ள காகித ஆலை நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . தமிழகம் உள்ளிட்ட இந்திய நாடு முழுவதும் இதுவரையிலும் பயன்படுத்தப்படாத பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை காகிதம் தயாரிப்பதற்காக குத்தகை அடிப்படையில் வழங்கினால் இன்னும் மரங்கள் வளர்க்கப்பட்டு காகித உற்பத்தி அதிகரிக்கும். ஏனெனில் காகிதம் தயாரிக்க மிக முக்கிய மூலப் பொருளாக மரம் உள்ளது . பசுமை புரட்சி, இயற்கை பாதுகாப்பு என்ற தொலைநோக்கு பார்வையுடன் மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு உதவ வேண்டும் .தொடர்ந்து நாங்களும் மாவட்ட அளவில் இல்லாமல் தமிழக முழுவதும் சிறுகுறு விவசாயிகளை சந்தித்து அவர்களிடமும் காகித தேவைக்காக மரங்களை வளர்ப்பது குறித்தும், இதன் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் வருவாய் குறித்தும் பேசி வருகிறோம். பொதுவாகவே இயற்கையாக வளரும் மரங்களை வெட்டி காகிதம் தயாரிக்கப்படுவதாக ஒரு பேசுபொருள் உள்ளது .ஆனால் எதார்த்த நிலையில் நாங்கள் காகித தேவைக்காகவே தனியார் நிலங்களில் எங்களுக்கு உரிய நிலங்களில் மரங்களை வளர்த்து அதன் மூலமாகவே காகித உற்பத்தியை செய்து வருகிறோம். அதே நேரத்தில் பிளாஸ்டிக் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக வலுவான தன்மையுடன் பேப்பர் பைகளை தயாரிக்கும் முன் முயற்சியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து உலகளாவிய வகையில் காகித உற்பத்தியில் பல்வேறு சவால்கள் இருந்தாலும் தொடர்ந்து காகித உற்பத்தி பணியை மேற்கொண்டு வருகிறோம் .சமீபத்தில் இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 81 க்கும் அதிகமான மக்கள் மின்னணு ஊடகம் ,மொபைல் போன்றவற்றை காட்டிலும் காகிதத்தில் அதிகம் படிக்க விரும்புவதாக கூறப்பட்டுள்ளது எதார்த்த உண்மையும் அதுதான். எத்தனையோ சமூக ஊடகங்களிலும் நாம் எவ்வளவு பெரிய கருத்துக்களை படித்தாலும் அது காகிதத்தில் படிப்பது போன்ற உணர்வை தராது. காகித தினமான ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி எங்களுடைய காகித ஆலை காலனி பகுதி திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் காகித பயன்பாடுகள் குறித்த கண்காட்சியும், நடன நிகழ்ச்சி பேச்சுப்போட்டி ,எப்.எம். ரேடியோவில் 15 மாவட்டங்களில் காகித தின சிறப்பு ஒளிபரப்புகள் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்வுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. எத்தனை நவீன வளர்ச்சிகள் வந்தாலும் கால சூழல்கள் மாறினாலும், காகிதத்தின் பயன்பாடு மேலும் மேலும் பல்வேறு பரிமாணங்களில் அதிகரிக்கிறது தவிர ,அது குறையப்போவதில்லை .நாங்களும் காகித உற்பத்தி அதன் தொழிலில் உள்ள சவால்களை தொடர்ந்து சந்தித்து அடுத்த இலக்கை நோக்கி சென்று கொண்டுள்ளோம் .அனைவரும் பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை முற்றாகத் தவிர்த்து காகிதத்தலான அனைத்து வகையான பொருட்களையும் வாங்கி உபயோகிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத காகிதத்தை போற்றுவோம். அனைவருக்கும் இனிய காகித தின நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறினார்.

Similar News