கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2025-08-08 15:15 GMT
குமாரபாளையத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து ஆலோசனை கூட்டம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடந்தது. சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி ரக உதவி அமலாக்க அலுவலர் விஜயராணி பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது: விசைத்தறியில் குறிப்பிட்ட ரகங்கள் மட்டும்தான் ஜவுளி உற்பத்தி செய்ய வேண்டும். கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பலர் தொடர்ந்து கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்து கொண்டு உள்ளனர். அவ்வாறு இருக்க கூடாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் பேசுகையில், கைத்தறிக்கு ஒதுக்கப்படுவது போல், விசைத்தறிக்கும் சில ரகங்கள் ஒதுக்கீடு செய்யுங்கள், என கேட்டுகொண்டனர். சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது: கைத்தறிக்கு 11 ரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளுக்கு, கெடுபிடி அதிகம் உள்ளது. ஏற்கனவே தொழில் மந்தமாக உள்ளது. ஆர்டர் இல்லை. வியாபாரம் இல்லை. மாதத்தில் 15 நாட்கள் ஜவுளி உற்பத்தி செய்து, 15 நாட்கள் விடுமுறை விட்டு வருகிறோம். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. ரக ஒதுக்கீடு சம்பந்தமாக அடிக்கடி ஆய்வு மற்றும் கெடுபிடி செய்வதால், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 ரகங்களில் விசைத்தறிக்கு 5,6, ரகங்கள் ஒதுக்கீடு செய்தால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும். நாட்டின் பொருளாதாரத்தில், விவசாயத்திற்கு அடுத்து, விசைத்தறி ஜவுளி உற்பத்தி பெரும்பங்கு வகிக்கிறது.

Similar News