திருமண மண்டபங்களில் தற்காலிக கண்காட்சி கடைகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும்...
வணிகர் அமைப்பு;
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாவட்ட செயலாளர் ஏ.வி.எம். ஆனந்த் தலைமையில் தஞ்சை மாநகர செயலாளர் ஆர்.ஜெயக்குமார் முன்னிலையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அண்மைக்காலமாக தமிழகத்தில் பெருநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகர்களில் திருமண மண்டபங்கள், காலிமனைகள் போன்றவற்றில் கண்காட்சிக்கடைகள் என்ற பெயரில் திடீர் கடைகளை எவ்வித முறையான அரசு அனுமதிகள் பெறாமலும், முறையாக வணிகவரித்துறையில் கண்காட்சிக் கடைகள் நடத்தும் இடங்களைப் பதிவு பெறாமலும், திடீர் கண்காட்சிக்கடைகள் போடுவது பெருகி வருகின்றது. இதனால், ஆண்டாண்டு காலமாய் வாடகைக்கு எடுத்து, வாடகை கொடுத்து, பணியாளர்கள் வைத்து தொழில் செய்கின்ற, முறையாக வரி செலுத்தி வருகின்ற உள்ளூர் வணிகர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அரசுக்கு வரி இழப்பும், வருவாய் இழப்பும் ஏற்படுவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக உள்ளூர் வணிகவரித் துறைக்கு புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது சம்பந்தமாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றமும் இதுபோன்ற தற்காலிகக் கடைகள் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது என, வரி செலுத்தி முறையாக வணிகம் செய்து வரும் வணிகர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் தடையாணை எண் மூலம் உறுதி செய்திருக்கின்றது. கார்ப்பரேட் கம்பெனிகளின் சில்லரை வணிகத்திற்கான அனுமதி மற்றும் உரிமத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உள்ளாட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகத் தரப்பிலிருந்து கேரள மாநிலத்தில் இருப்பதைப்போல தடை செய்திட வேண்டும் . எனவே முறையாக வணிகம் செய்கின்ற உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படாமலும், அக்கடைகளை நம்பி உள்ளூர் கடைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளார்களின் குடும்பங்கள் பாதிப்பு அடையாமலும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற ஆணையின்படி தற்காலிக கண்காட்சி கடைகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும். தஞ்சை நகர பகுதிகளிலும் மற்றும் அனைத்து சுற்று வட்டாரப் பகுதியிலும், வெளியூரில் இருந்து வந்து லோடு வண்டியில் பொருட்களை விற்கும் போது ஒலி பெருக்கி மூலம் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப இடைவிடாது ஒலிக்க செய்வதால் அந்தப் பகுதியில் நிரந்தரமாக வணிகம் செய்யும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது . இதனையும் கட்டுப்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் துணைத் தலைவர்கள் தாமரைச்செல்வன், ஒரத்தநாடு மணிசுரேஷ், நந்தகுமார், சீனி அசோகன், வெற்றிவேல், சக்கரவர்த்தி, முகமது கனி, சௌந்தர்ராஜன், முத்துமணி, ஜான், விடுதலை வேங்கை, புதிய பேருந்து நிலையம் கார்த்திக் பாலு, இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயம் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பூதலூர் ஜெயக்குமார், மாநகரத் துணைத் தலைவர் ராஜசேகர், பூதலூர் கார்த்தி, ராமலிங்கம், சுப்பிரமணியம், மெடிக்கல் பன்னீர், பேட்டரி அசோசியேசன் மோகன், தியாக சுந்தரமூர்த்தி, திருக்கருகாவூர் கார்த்திகேயன், மகளிர் அணி டாரத்தி கிரேசி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதே கோரிக்கை மனு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், வணிகவரித்துறை ஆணையர் ஆகியோரிடமும் அளிக்கப்பட்டது.