கல்வி உதவிக்கு ஏங்கும் மருத்துவ மாணவி.... எம்எல்ஏ நிதியுதவி ...
மருத்துவ மாணவி;
பல் மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஏழ்மை நிலையில் உள்ள மாணவி, படிப்புக்கான உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன் - ரேவதி தம்பதியினர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், நிதிஷ் என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருப்பையன் தூத்துக்குடி பகுதியில் அடுப்புக்கரி தயாரிக்கும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ரேவதி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஏழ்மை நிலையில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இவர்கள் வீட்டைக் கூட முழுமையாக கட்ட முடியாமல், ஒரு சிறிய அறையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவி கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து, தமிழக அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் (பி.டி.எஸ்) பல் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவி பிரியதர்ஷினிக்கு அவர் படித்த கரிசவயல் பள்ளி ஆசிரியர்கள் உதவி செய்து உயர் கல்விக்கு வழிகாட்டி உள்ளனர். மாணவியின் நிலை குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், சனிக்கிழமை நேரில் சென்று மாணவியை சந்தித்து பொன்னாடை அணிவித்து நிதி உதவி வழங்கினார். இது குறித்து மாணவி பிரியதர்ஷினி கூறுகையில், "மிகவும் ஏழ்மை நிலையில் எங்களது பெற்றோர் எங்களை வளர்த்து வருகின்றனர். எனது தந்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அடுப்புக்கரி தயாரிக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தாயார் கூலி வேலைக்கும், 100 நாள் வேலைக்கும் சென்று எங்களை காப்பாற்றி வருகிறார். தற்போது நீட் தேர்வு எழுதி பல் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். தமிழக அரசின் ஏழரை சதவீத இட ஒதுக்கீடு காரணமாக எனக்கு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் நிலையில் உள்ளேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், என்னுடைய ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு எனக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் உதவுவதாக கூறினார்" என்றார். அப்போது கரிசவயல் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பழனித்துரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.ஆர்.எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் வி.ஜெயராமன், சி.விஜயகுமார், ஆர்.தீனன், சி.சரவணன், சண்முகநாதன், சு.முருகேசன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மாணவி பிரியதர்ஷினிக்கு உதவ விரும்புவோர் 8248360471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.