ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருவழி பாதையாக்க பொதுமக்கள் கோரிக்கை

சங்ககிரி அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் பகுதியில், இருவழி பாதையாக்க அல்லது மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-08-11 12:48 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, சங்ககிரி துர்க்கம் என்ற இடத்தில் ரயில்வே பாலம் உள்ளது. இது பழமையான பாலம். சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கியமான, போக்குவரத்து மிகுந்த சாலை.திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் அதிக அளவிலான கல்லூரிகள் உள்ளன. இங்கு செல்ல இந்த பாலம் வழியாகத்தான் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். நாமக்கல் நகரம் லாரி பிட்டிங் பணிக்கு புகழ் பெற்றது. இங்கு லாரிகளுக்கு பிட்டிங் பணிகள் செய்ய, ஏராளமானோர் இந்த பாலம் வழியாகத்தான் சென்று வருகிறார்கள். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு குமாரபாளையம், படவீடு, முனியப்பன் கோவில், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் செல்ல இந்த பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றனர். திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றனர். நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த பாலம் வழியாகத்தான் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த பாலம் கீழ் பகுதி மிகவும் குறுகலாக உள்ளதால், இருபுறமும் வாகனங்கள் மணிக்கணக்காக காத்திருந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், நீதிமன்றத்திற்கு செல்வோர், நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள், என பலதரப்பட்ட பொதுமக்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் கூட சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல், பலரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பாலம் பகுதியில் இரு வழி பாதையாக்கி, அகலப்படுத்த வேண்டும். அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News