தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கேலிவதை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சி.ராணி (பொ) தலைமை வகித்தார். வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர் ப.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளரும், எழுத்தாளருமான க.மாணிக்கவாசகம், கேலிவதை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேசுகையில் , "மாணவர்கள் இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விலகியிருக்கும் வழிமுறைகள், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு குறைந்த வயதில் வியாதிகளால் உயிரிழக்கும் அபாயம், இவைகளை கட்டுப்படுத்த ராக்கிங் தடுப்புச் சட்டம், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தடுப்பு சட்டங்கள் குறித்து மாணவர்களிடம் விளக்கிப் பேசினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் கு.முத்துகிருஷ்ணன் கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறைத்தலைவர் நா.பழனிவேலு வரவேற்றார். ஆங்கிலத் துறைத்தலைவர் ர.ராஜ்மோகன் நன்றி கூறினார்.