கொடைக்கானலில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை
கொடைக்கானல் பகுதிகளில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.;
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், ஆனந்தகிரி, இருதயபுரம், ரைபிள் ரேஞ்ச் சாலை, சீனிவாசபுரம், காா்மேல்புரம், அட்டக்கடி, பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்தும், சாய்ந்தும் ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றன. மேலும், மின்கம்பங்களில் செல்லும் வயா்களில் செடி, கொடிகள் படா்ந்துள்ளதாலும் காற்றடிக்கும் நேரங்களில் மின் கம்பிகள் அறுந்து மின் தடையும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த, ஆபத்தான, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலுள்ள மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டுமென கொடைக்கானல் மின்வாரியத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.