கோவை: நான் முதல்வன் கல்லூரி களப்பயணம் தொடக்கம் !
கோவையில் நான் முதல்வர் கல்லூரி களப்பயணம் நேற்று தொடங்கியது.;
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் உயர்கல்வி குறித்து அறிந்து கொள்ளும் வகையில், கல்லூரி களப்பயணம் கோவை மாவட்டத்தில் நேற்று தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து இத்திட்டத்தைத் துவக்கி வைத்தார். கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் பாடத்திட்டங்கள் பற்றி நன்கு கேட்டறிந்து கொள்ளுமாறு மாணவிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். முதல் நாளாக, இரண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் மத்திய அரசின் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி ஆகியவற்றுக்குக் களப்பயணம் மேற்கொண்டனர். இனிவரும் நாட்களில், அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் அருகிலுள்ள அரசு, மத்திய அரசு மற்றும் தேவைப்பட்டால் தனியார் கல்லூரிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.