கோவை: 'கோல்ட் ரெப்' மருந்து விவகாரத்தில் தீவிர விசாரணை அவசியம் – அண்ணாமலை கோவை பேட்டி !

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் மோதல், கரூர் விவகம் மற்றும் கோவை பாலம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்களில் தனது கருத்துக்களை கூறி, சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் பொறுப்புத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.;

Update: 2025-10-07 06:21 GMT
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். ‘கோல்ட் ரெப்’ மருந்து விவகாரம் தொடர்பாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனம் தயாரித்த மருந்தை குடித்ததால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 11 குழந்தைகள் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார். இதில் யாரோ தேவையில்லாத பொருளை கலந்து மருந்து விஷமாக மாறியிருக்கலாம் என்றும், இது கவனக்குறைவா அல்லது திட்டமிட்ட செயல் தானா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மத்திய அரசுடன் இணங்கிச் செல்லாத தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். “இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் மத்திய அரசுடன் இணைந்து மாநில வளர்ச்சிக்காக பணிபுரிகிறார்கள்; ஆனால் தமிழக முதல்வர் மட்டும் மத்திய அரசை எதிரியாகக் கருதிப் பேசுகிறார்” என்றார். ஆளுநருடனான மோதல் குறித்து, “ஆளுநர் கேட்கும் கேள்விகள் சரியானவை. அவரை எதிர்த்து போராட்டங்களை உருவாக்குவது அரசியலாக சரியான வழி அல்ல. இது தமிழகத்திற்கு நல்லது அல்ல” எனவும் தெரிவித்தார். கரூர் விவகாரம் குறித்து அவர், “நடிகர் விஜய் மீது வழக்கு போடுவது சட்டப்படி நிலைநிற்காது. அரசு உண்மையிலேயே நியாயமாக இருந்தால், தவறு செய்தவர்கள் யார் என்றாலும் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார். நீதிபதி சமூக வலைதள கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியிருப்பதையும் அண்ணாமலை ஆதரித்தார். கோவை பாலம் திறப்பு குறித்து அவர், “முதல்வர் இதை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செய்த வேலை என்று மக்களிடம் கூற வேண்டும்” என்றார். அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைப் பற்றியும், “உயர் நீதிமன்றம் கூறியபடி அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்றார். தன் பெயரைப் பயன்படுத்தி கோவையில் பணம் பறித்ததாக வந்த புகாரில், “இது குறித்து முதன்முறையாக நான் புகார் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கோருகிறேன்” என்று கூறினார். பாஜக கூட்டணி குறித்து அவர், “எங்களுக்கு எதிரி திராவிட முன்னேற்றக் கழகமே. எங்கள் கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை. அனைவரும் திமுகவை வீழ்த்துவதே ஒரே நோக்கம்” என்றார்.

Similar News