பாரதியார் பல்கலைக் கழக ஒப்பந்த தொழிலாளர்கள், கடந்த 7 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத் தொகையும் தீபாவளி முன்பணமும் வழங்காத பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். தொழிலாளர் சங்கம் சார்பில் ஏற்கனவே 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கடிதம் அளிக்கப்பட்டிருந்தும், நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் ரூ.20,000 தீபாவளி முன்பணம் வழங்கும் சுற்றறிக்கையை வெளியிட்டு, ஒப்பந்த ஊழியர்களை புறக்கணித்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து துணைவேந்தர் "நிதி இல்லை எப்படி கொடுக்க முடியும்?" என்று அலட்சியமாக பதிலளித்ததாக தொழிலாளர்கள் கூறினர். இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அவர்கள், வருகிற வெள்ளிக்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.