நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

மாவட்ட ஆட்சியர் புதுச்சத்திரம், களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்“ முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-11-22 12:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்“ முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.நாமக்கல் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்னும் திட்டத்தின் கீழ் உயர் மருத்துவ சேவை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 15 வட்டாரங்களில் 45 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்களும் என மொத்தம் 48 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், மருத்துவ வசதி குறைவாக உள்ள நகர்ப்புற பகுதிகளை தேர்ந்தெடுத்து வாரந்தோறும் சனிக்கிழமை/தகுந்த நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைதுறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சி அமைப்புகள், உயர்கல்வித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி / கல்லூரி வளாகங்களில் முகாம்கள் நடத்தப்படுகிறது.அந்த வகையில் இன்றைய தினம் களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதயநோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், பழங்குடியினர் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாம்களில் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் மற்றும் இதர இரத்தப் பரிசோதனை, மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, காச நோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்படும். மேலும், சிறப்பு பொது நல மருத்துவம், பொது நல அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மன நலம், கதிர்வீச்சு மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இயன்முறை மருத்துவம், இருதயநோய் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய பாரம்பரிய மருத்துவம் ஆகிய 17 துறைகளை சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.மேலும், இம்முகாமில் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் நோயாளிகளுக்கு தலைமை மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.மாவட்ட ஆட்சியர்  “நலம் காக்கும் ஸ்டாலின்“ முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள், பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மேலும் உடனடி தீர்வாக ஒரு மாற்றுத்திறனாளி மாணவனுக்கு அடையாள அட்டையினை வழங்கினார்.முன்னதாக, ஸ்பைரோ பிரைம் சீனியர் செக்கண்டரி பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் ஓவியப்போட்டி மற்றும் வண்ணத்திறன் கண்காட்சியினை பார்வையிட்டார்.இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் மரு.க.பூங்கொடி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Similar News