மாவட்ட ஆட்சியர் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;

Update: 2025-12-03 13:41 GMT

இவ்விழிப்புணர்வு பேரணியில் விவேகானந்தா பார்மசி மற்றும் நர்சிங் கல்லூரி, பாவை, செங்குந்தர், கோகுல்நாதா நர்சிங் கல்லூரிகள், ஏ.என்.எம். பயிற்சி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி, நகர பேருந்து நிலையம், மணிகூண்டு வழியாக திருச்சி சாலை சென்று, பின்பு பாரத் ஸ்டேட் வங்கி வழியாக மீண்டும் நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சுமார் 3 கி.மீ பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம் 1988 ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த ஆண்டு “இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி /எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல்” Overcoming disruption, transforming the AIDS response)” என்ற கருத்தினை மையக்கருத்தாக கொண்டு எச்.ஐ.வி இல்லா சமூதாயம் உருவாக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.“இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் எச்.ஐ.வி உள்ளோர்களை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்கள் மற்றும் அவர்களுக்கான சிகிச்சை வழங்கும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக 2023-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி நாமக்கல் மாவட்டத்தில் HIV பரவல் நிலை (Prevalence Rate) 0.47% ஆக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் 24 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் இலவச எச்.ஐ.வி பரிசோதனையும் சுகவாழ்வு மையங்களில் பால்வினைநோய் குறித்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 24 முதல் அக்டோபர் 25 வரை 53617 நபர்களுக்கு எச்.ஐ.வி /எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் 315 நபர்களுக்கும், 31893 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4 கர்ப்பிணிகளுக்கும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு அவர்கள் கூட்டு மருந்து சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் இலவச ஏ.ஆர்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் தற்போது வரை 7553 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை எடுத்துவரும் நபர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்றவாறு 10 இணை ஏ.ஆர்.டி சிகிச்சை மையங்கள் கொல்லிமலை, மல்லசமுத்திரம், கபிலர்மலை, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை மற்றும் வினைதீர்த்தபுரம் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன. மேலும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த மூன்று வருடங்களில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 283 நபர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையும், 159 நபர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைத்திட்டம் மூலம் 53 நபர்களும், குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 13 குழந்தைகளுக்கு உதவித்தொகையும், 7 பெண்களுக்கு விதவை உதவித்தொகையும், மேலும் மாதந்தோறும் 300 நபர்களுக்கு ஊட்டசத்து உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2025 ஜுன் மாதம் முதல் 232 குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.1000/- OVC திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. எச்.ஐ.விஃஎய்ட்ஸ் தடுப்பு குறித்த செய்திகள் இளைய தலைமுறையினர் மத்தியில் சென்றடைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கங்கள் (RRC) நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. இதில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் தன்னார்வ உறுப்பினராக இணைந்துள்ளனர்.  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுடன் இணைந்து, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ/மாணவிகளுக்கான வாழ்வியல் திறன்கல்வி குறித்த பயிற்சி வகுப்புகள், கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மாரத்தான் போட்டிகள், கிராமசபை கூட்டங்களில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தாக்கத்தை குறைப்பதற்கும், மேலும் மக்கள் மத்தியில் எச்.ஐ.வி குறித்த மூடநம்பிக்கைகள், தவறான கருத்துக்களை மாற்றுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதனைத்தொடர்ந்து, மாவட்ட  ஆட்சியர்  தலைமையில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி”எச். ஐ. வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன். அறிந்ததை என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன். புதிய எச். ஐ. வி. / எய்ட்ஸ் தொற்று இல்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்கிடுவேன். தன்னார்வமாக இரத்தப்பரிசோதனை செய்து கொள்ள முன்வருவேன். எச்.ஐ. வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைப்பேன். அவர்களுக்கு சம உரிமை அளிப்பேன். ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை மதித்து நடப்பதன் மூலம், எச்.ஐ.வி / எய்ட்சை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன் - என உளமார உறுதி ஏற்கிறேன்” என்ற உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தும், வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லலைகளை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், மாவட்ட சுகாதார அலுவலர் / மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மரு.க.பூங்கொடி, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு.இரா.குணசேகரன், மண்டல திட்ட மேலாளார் த.தாமோதரன் உட்பட கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Similar News