தோட்டக்கலைப் பயிர்களில் மதிப்பு கூட்டுதல் தொடர்பான கருத்தரங்கினை தொடங்கி வைத்த அமைச்சர் மா. மதிவேந்தன்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் மதிப்பு கூட்டுதல் தொடர்பான கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்.;
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தலைமையில், மேயர் து.கலாநிதி முன்னிலையில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் மதிப்பு கூட்டுதல் தொடர்பான கருத்தரங்கினை தொடங்கி வைத்து, உரையாற்றினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது, தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் மதிப்பு கூட்டுதல் தொடர்பான கருத்தரங்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் இன்று (12.12.2025) மற்றும் நாளை (13.12.2025) 2 நாட்கள் நடைபெறுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் 20 மாவட்டங்கள் மட்டுமே இணைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டமும் இணைவதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பலன் உள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களுக்காக கூடுதலாக மானியம் பெற இயலும். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரம் உயரும். அந்த வகையில் முதன்முறையாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் என்பது அனைவரும் வாங்க கூடிய சிறப்பு வாய்ந்த பொருட்களாகும். விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். காய்கறிகள், பழங்கள், தேன், ஜவ்வரிசி இதன் மூலம் சத்தான உணவுகளை குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் உட்கொள்ளும் வகையில் சுவாரஸ்மான முறையில் மதிப்புக்கூட்டப்பட்டு வழங்கப்படுகிறது. இதே போல் ஏற்கனவே, சிறுதானியங்கள் மதிப்புகூட்டி எவ்வாறு வழங்கலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தோட்டக்கலைத்துறையின் மூலம் ரூ.1000 முதல் ரூ.50.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பாலிகிரீன் ஹவுஸ் திட்டத்திற்கு ரூ.16.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை பயிர்களில் மதிப்பு கூட்டுதல், பழப்பயிர்களில் மதிப்பு கூட்டுதல், மரவள்ளி சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டல், தேனீவளர்ப்பு, வாழை, காய்கறி, தக்காளி, பலா, மிளகு, தென்னை மற்றும் சிறுதானிய பயிர்களில் மதிப்பு கூட்டுதல் போன்ற தலைப்புகளில் தொழில்நுட்ப உரை வழங்கப்படுகிறது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மரவள்ளி, தென்னை, வாழை, பனை காய்கறிகள் ஆகியவற்றில் மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டதுடன் மதிப்புகூட்டுதல் குறித்து விளக்கமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் தேனில் பல்வேறு உபபொருட்கள் மதிப்புகூட்டுதல் குறித்தும் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். முன்னதாக, வேளாண் இணை இயக்குநர் எஸ்.மல்லிகா மற்றும் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி ஆகியோர் தங்களது துறை சார்ந்த மதிப்பு கூட்டுதலில் உள்ள வாய்ப்புகள் மற்றும் மதிப்பு கூட்டுதலின் தேவை குறித்தும் உரையாற்றினர். இக்கருத்தரங்கில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கையேடு, மதிப்பு கூட்டல் தொடர்பான புத்தகம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் செ.பூபதி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) எம்.புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.