மாநிலங்களையும் மக்களையும் புறக்கணித்த பட்ஜெட் – ஈஸ்வரன் எம்எல்ஏ

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை;

Update: 2026-02-01 14:57 GMT
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2026–2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, எதிர்பார்த்த வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல், வெறும் வரவு–செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.தங்கம், வெள்ளி விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. அதேபோல், பணவீக்கத்தை குறைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை. மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கோ, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கோ உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு உயர்த்தப்படவில்லை. கடனில் தத்தளித்து வரும் மாநிலங்களுக்கு உதவியாக மாநில பங்கை உயர்த்தி அறிவித்திருக்கலாம். குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.மேலும், வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக தொடர்ந்து வீழ்ந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் அறிவிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றைப் பற்றிய அறிவிப்புகள் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார். சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் பெருமளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிப்பதாக ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்தார். தங்கம், வெள்ளி போன்ற அத்தியாவசிய சேமிப்பு பொருட்களின் விலை ஏழை, நடுத்தர மக்களால் யோசித்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மொத்தத்தில், இந்த நிதிநிலை அறிக்கை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்தார்.

Similar News