பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலையில் உள்ள அதிநவீன தானியங்கி பால்பதன ஆலையின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, ரூ.89.29 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 2.0 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால் பதன ஆலையினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலையில் உள்ள அதிநவீன தானியங்கி பால்பதன ஆலையில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் .பெ.ராமலிங்கம் மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் கலந்து கொண்டார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் 2.0 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நவீன பால்பதன ஆலையினை திறந்து வைத்துள்ளார்கள். தமிழ்நாடு அரசு 2022-2023-ம் ஆண்டு பால்வளத்துறை மானிய கோரிக்கையின்போது, மானியக்கோரிக்கை எண்-8-ன் படி, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களால், நாமக்கல் மாவட்டத்தில் 2.0 இலட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட நவீன தானியங்கி பால்பண்ணை கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 22.10.2024 அன்று மேற்படி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.கட்டுமானப் பணிகள் முடிவுற்று இன்றைய தினம் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. தை மாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் 2.0 இலட்சம் லிட்டர் கையாளும் திறன்கொண்ட தானியங்கி நவீன பால்பதன ஆலையின் சோதனை ஓட்டத்தினை துவக்கி வைத்தார். இந்த புதிய பால்பதன ஆலை மூலம் நேரடியாக சுமார் 100 நபர்களுக்கும், ஒப்பந்த அளவில் சுமார் 250 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கபெரும். புதிய அதிநவீன தானியங்கி பால்பதன ஆலையின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் நேரடியாக 15 ஆயிரம் பால் உற்பத்தியாளர் மற்றும் சுமார் 5 இலட்சம் நுகர்வோர் தினமும் பயன் பெறுவார்கள்.மேலும் 504 பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களும், அதில் பணியாற்றும் 1100 பணியாளர்களும் பயன் பெறுவார்கள். மேலும் இந்த புதிய பால்பதன ஆலையில் தினசரி ஒரு லட்சம் லிட்டர் அளவுக்கு பால் பாக்கெட் கள் தயார் செய்யப்பட்டு தினசரி நாமக்கல் மாவட்ட நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த புதிய பால் பதன ஆலையின் மூலம் பால் உப பொருட்களாக தினசரி 10,000 லிட்டர் தயிர், 5,000 லிட்டர் மோர், 200 கிலோ பால்கோவா மற்றும் 1000 கிலோ வெண்ணை உற்பத்தி செய்யபட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோருக்கு தினசரி தங்குதடையின்றி விநியோகம் செய்யப்படும்.பால்பதன ஆலை முழு அளவில் செயல்படும் போது நாமக்கல் மாவட்டம் நுகர்வோர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற மாவட்ட நுகர்வோர்களும் பயன் பெறுவார்கள். இந்த ஆலை துவங்கி ஓரிரு வருடங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூடுதலாக பங்கு ஈவு தொகை பெறுவார்கள். மகாத்மா காந்தியடிகள் விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என கூறினார். விவசாயத்துடன் இணைந்திருப்பது கூட்டுறவு இயக்கம். இந்த கூட்டுறவு தத்துவத்தின்படி, இன்றைய தினம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் இயங்குகிறது. நல்ல இயற்கையான சூழ்நிலையில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதிகமான உற்பத்தியை பெருக்க வேண்டும். எதிர்காலத்தில் மிகப்பெரிய இலாப நோக்கத்தோடு இந்நிறுவனம் செயல்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி விரைவில் அறிவிப்பார். ஆக கடந்த ஐந்தாண்டுகளில் நாமக்கல் மாவட்டத்திற்கான பல்வேறு அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் (ஆவின்) மரு.சண்முகம், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பெ.நவலடி, இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் மா.சந்தானம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, துணை பதிவாளர் (பால்வளம்) ஐ.சண்முகநதி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மரு.எம்.செல்வராஜ், உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.