போதைப்பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முழுமுயற்சியுடன் செயல்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மன்றங்கள் போதைப்பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முழுமுயற்சியுடன் செயல்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியர் தகவல்.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விமலா, முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாவட்ட காவல் துறை, மதுவிலக்கு காவல் துறை, மாவட்ட மனநல மருத்துவர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர், மாவட்ட தொடர்பு அலுவலர், ரெட் கிராஸ் உள்ளிட்ட அலுவலகங்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வகை கல்வி நிறுவனங்கள் அருகில் அமைந்துள்ள கடைகளில் தொடர்ச்சியாக கூட்டுத் தணிக்கை செய்து போதைப் பொருளை கையகப்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உள்ளாட்சித் துறை, நகராட்சி, மாநகராட்சி துறையினர் கடைகளில் ஆய்வு செய்து போதைப் பொருள்கள் இருந்தால் கைப்பற்றி அபராதம் விதித்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, கல்வி நிறுவனங்கள் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை கனிவுடன் நடத்த வேண்டும். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தகுந்த மனநல ஆலோசனை வழங்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் செயல்படும் போதைப்பொருள் தடுப்பு மன்றங்கள் (Anti Drug Club) முழுமுயற்சியுடன் செயல்பட வேண்டும். ”Drug free Tamil Nadu App“ னை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருட்கள் சார்ந்த குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்-10581-ல் அழைக்கலாம். அல்லது 9498110581-என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு செய்தி அனுப்பலாம். மேலும் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் பெற 14416 மற்றும் 180012356 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். புகார் அளித்தது யார் என்று வெளியில் தெரியாமல் புகார் அளிக்க Android மற்றும் iOS இல் கிடைக்கும் Drug free Tamil Nadu கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மாணவர்களாகிய நீங்கள் நமது தேசத்தின் தூண்கள். உங்கள் சமூகத்தை பாதுகாப்பதில் பெருமை கொள்ள வேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பார்த்து பயனடையும் வகையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதற்கான முன்னோட்ட காணொலி தற்போது பகிரப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் நமக்கு வேண்டாம். போதைப்பொருட்கள் பயன்படுத்தாத மாணவ சமுதாயம் ஏற்படுத்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) (பொ) டாக்டர் ஆர்.விஜயராகவன், உதவி ஆணையர் (கலால்) என்.எஸ்.ராஜேஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் ஆ.சு.எழிலரசி, மாவட்ட மனநல மருத்துவர் மரு.இந்துமதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜி.கற்பகம், போதை பொருள் எதிப்பு மன்ற மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர்.ராஜேஸ்கண்ணன், புகையிலை தடுப்பு ஆலோசகர் மரு.என்.பி.லலிதா, கோட்ட கலால் அலுவலர் ஆர்.சீனிவாசன் உட்பட துறைச்சார் அலுவலர்கள் மற்றும் 101 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.