ரயில் வசதி மேம்பட வேண்டும் – தென் மாவட்ட ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்க கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம் தொழில், வணிகம், கல்வி மற்றும் விவசாய வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில், ரயில் வசதிகள் போதிய அளவில் இல்லாதது பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் சிரமமாக இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.;

Update: 2026-02-10 15:48 GMT
தென் தமிழக மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நாமக்கல் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார். தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.எஸ் சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில், நாமக்கல் மாவட்டம் தொழில், வணிகம், கல்வி மற்றும் விவசாய வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில், ரயில் வசதிகள் போதிய அளவில் இல்லாதது பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் சிரமமாக இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.இதனை கருத்தில் கொண்டு, தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... திண்டுக்கல்லில் இருந்து நாமக்கல் வழியாக சென்னை செல்லும் வகையில், தினசரி பகல் நேர இன்டர் சிட்டி ரயில்களை இயக்க வேண்டும்.சேலம் சந்திப்பில் இருந்து சென்னை எக்மோர் வரை தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களை, கரூர்–திண்டுக்கல் அல்லது திருச்சி வரை நாமக்கல் வழியாக நீட்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து தற்போது கரூர்–ஈரோடு–சேலம் வழியாக இயக்கப்பட்டு வரும் ரயில்களை, கரூர்–நாமக்கல்–சேலம் வழியாக மாற்றி இயக்க வேண்டும்.இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு பயண வசதி மேம்படும் மட்டுமின்றி, வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கமாக அமையும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் மற்றும் ரயில் பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News