அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டைப்-1 நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் சிறப்பு பராமரிப்பு மையத்தின் சேவையினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் .
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் டைப்-1 நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் சிறப்பு பராமரிப்பு மையத்தின் சேவையினை தொடங்கி வைத்தார்.;
இந்தியாவில் சுமார் 9 இலட்சம் மக்கள் டைப்-1 அல்லது சிறுவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 7 மாதம் வயது முதல் தொடங்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் ஆவர். இவர்கள் தினமும் நான்கு முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவும், விரல் மூலம் இரத்த குளுக்கோஸ் பரிசோதனை செய்யவும் வாழ்க்கை முழுவதும் அவசியமாகிறது. இச்சிறார்கள் பெரும்பாலும் 20 வயதைக் கடந்தும் வாழ முடியாமல் சிறுநீரக செயலிழப்பு, பார்வை இழப்பு, திடீர் கோமா போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகிறார்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேசிய சுகாதார ஊக்கத்திட்டம் தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்ட இதயங்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 85 சிறார்களுக்கு உலகத் தரத்தில் உள்ள சிறந்த இன்சுலின்களை முன் நிரப்பப்பட்ட கார்ட்ரிட்ஜ் வடிவில், வலியில்லா 4 மிமீ ஊசிகள், குளுகோமீட்டர், ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் 100 குளுக்கோஸ் ஸ்ட்ரிப்கள், இன்சுலின் பம்ப் (ஊசி இல்லாத உயர் தொழில்நுட்ப சாதனம்) மற்றும் 24 மணி நேர அவசர உதவி தொலைபேசி சேவை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இந்த சிகிச்சை மேற்கத்திய நாடுகளின் தரத்துக்கு இணையாக வழங்கப்படுகிறது. இதன் விளைவாக அவசர மருத்துவச் சேர்க்கைகள், சிறுநீரக செயலிழப்பு, பார்வை இழப்பு, மரணம் போன்றவை பெருமளவில் குறைந்துள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் சிகிச்சைக்கான சராசரி செலவு ரூ.5000 முதல் ரூ.6000 வரை உள்ளது.அதனைத் தொடர்ந்து இன்றைய தினம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயங்கள் அறக்கட்டளை மற்றும் தேசிய சுகாதார ஊக்கத்திட்டம் இணைந்து டைப்-1 நீரிழிவு நோய்க்கான சிறப்பு பராமரிப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், டைப்-1 நீரிழிவு நோயால் ஏற்படும் தடுக்கக்கூடிய கண் பார்வை இழப்பை கண்டறிய ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்ட முன்னேற்றமான கண் கேமரா, சிறுநீரக செயல்பாடு, HbA1c, ஹீமோகுளோபின் மற்றும் தைராய்டு பரிசோதனைகளை ஒரே சொட்டு ரத்தத்தின் மூலம் 3 முதல் 5 நிமிடங்களில் முடிவளிக்கும் சாதனங்கள், சிறந்த இன்சுலின்கள், ஊசிகள், குளுக்கோஸ் சென்சார்கள், குளுகோமீட்டர்கள், குளுக்கோஸ் ஸ்ட்ரிப்கள், இன்சுலின் பம்புகள் ஆகியவை இருக்கின்றன. மேலும் சிறார்களை தொடர்ந்து கண்காணிக்கும் சிறப்பு நீரிழிவு நிபுணர் மற்றும் 24 மணி நேர அவசர கால் சேவையும் இதில் உள்ளன.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்ட இந்த டைப்-1 நீரிழிவு நோய்க்கான சிறப்புத் திறன் மையம், நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய சிறார்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. “டைப்-1 நீரிழிவு நோயுள்ள எந்த ஏழைக் குழந்தையும் சிகிச்சை இல்லாமல் தவிக்கக் கூடாது; ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமான, சந்தோஷமான, பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது,” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன், குழந்தைகள் நல மருத்துவத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சுரேஷ்கண்ணன், இணைப் பேராசிரியர் டாக்டர் வசுமதி, பொது மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் குமாரராஜா, இணைப் பேராசிரியர் டாக்டர் சுதா செல்வி, இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கிருஷ்ணன் ஸ்வாமிநாதன் உட்பட இம்மையத்திற்கு நிதியுதவி வழங்கிய ஏக்சன் அக்ரிசயன்ஸ் (ACSEN Agri sciences) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில்நாதன் மற்றும் சித்ரா செந்தில்நாதன் மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் ரோட்டரி கிளப் தலைவர் அர்டிஎன் சைலேந்திர பான்சாலி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவ பயனாளிகள் கலந்து கொண்டனர்.