10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவையில் 10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவை புரூக்பீல்டு மால் எதிரே உள்ள பகுதியில் தனியாரால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. கோவை புரூக்பீல்ட் சாலை காமராஜபுரம் சிஎம்சி காலனிக்கு செல்லும் பொதுப் பாதை கடந்த 30 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்திருந்தாக தனியார் நிறுவனத்திற்கு எதிராக புகார்கள் எழுந்தது.
அதனைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.அந்த உத்தரவுக்கு எதிராக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.தடை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் வழக்கு நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதி சுப்ரமணியம் ராஜசேகர் அமர்வில் நடைபெற்ற இந்த விசாரணையில் பொது பாதை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டது. உத்தரவை தொடர்ந்து 21 சென்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கடைகள் இன்று 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
இந்த பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர்.இதன் மூலம் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.