தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்
அங்கன்வாடி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
நாகையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் செல்வராணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலசரஸ்வதி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் டெய்சி பேசினார். மாநாட்டில், அங்கன்வாடி பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை குறைக்கும் போக்கை கைவிட வேண்டும். தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, நாகை அவுரித்திடலில் இருந்து பேரணி புறப்பட்டு, அரசு ஆஸ்பத்திரி, பாரதி மார்க்கெட், அண்ணாசிலை, நீலா கீழே வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) வேம்பரசி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.