பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டண விவகாரம் - அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு
பிஎஸ்என்எல் இணைய சேவைக்கு பள்ளிக்கல்வித் துறை ரூ.1.5 கோடி நிலுவை வைத்த விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகியுள்ளது.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழகத்தில் எந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் இணைய இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுவரை ரூ.2,151 கோடியை மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்காமல் உள்ளது. ஆனாலும், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 43 லட்சம் மாணவர்களின் நலனுக்காக எந்த சம்பள நிலவையோ, கட்டண நிலுவையோ இல்லாமல் மாநில அரசு நிதியில் இருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் செலுத்தியுள்ளோம் என்றார். தொடர்ந்து இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், 'தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான கட்டண பாக்கியை உடனே கட்டவில்லையெனில் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கடிதம் வந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், துறை அமைச்சர் புதிய கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெறும் பொய்களை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை எப்படி நம்ப முடியும்? கடந்த 3 ஆண்டுகளில், பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5,858.32 கோடி. சமக்ர சிக்ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவோம் என்று கடிதம் அளித்துவிட்டு பல திட்டங்களை இன்னும் செயல்படுத்தவில்லை. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.50 கோடியை கட்டுவதற்குக் கூட முடியவில்லையா என்று கூறியுள்ளார்.