மக்களுடன் முதல்வர் திட்டம்: 137 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரசு செய்திகள்;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், ஒட்டங்காடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் மற்றும் நடுமனைக்காடு அரசு நிகழ்ச்சி, கல்லூரணிக்காடு ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு, திருச்சிற்றம்பலம் ஊராட்சியில், பாரதி நகர் ஆதிதிராவிடர் குடியிருப்பு, செருவாவிடுதி ஊராட்சியில் மேல ஆதிதிராவிடர் குடியிருப்பு, இடையாத்தி ஊராட்சியில் கொடிமரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு, திருவோணம் ஒன்றியம் வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் தட்டாங்கொல்லை ஆதிதிராவிடர் குடியிருப்பு ஆகிய 6 இடங்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிகளில் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் 278 மனுக்களும், செருவாவிடுதி ஊராட்சியில் 196 மனுக்களும், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 167 மனுக்களும், கல்லூரணிக்காடு ஊராட்சியில் 172 மனுக்களும், இடையாத்தி ஊராட்சியில் 301 மனுக்களும், வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் 364 மனுக்களும் ஆக மொத்தம் 1,476 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று, சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்து விவரங்களை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் கேட்டறிந்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1,06,000 மதிப்பில் 1 பயனாளிக்கு மின்கலன் பொருத்தப்பட்ட மின்கலனால் இயங்க கூடிய சக்கர நாற்காலி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு காப்பீட்டிற்கான அட்டைகள், திருவோணம் ஒன்றியத்தில் 52 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சத்து 33 ஆயிரம், பேராவூரணி ஒன்றியத்தில் 81 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 78 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசோலையினையும் ஆக மொத்தம் 137 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சதாசிவம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.