சேலம், தர்மபுரியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,542 வாகனங்கள்
ரூ.65 லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், மேட்டூா், ஆத்தூா், வாழப்பாடி, அரூா், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் விதிமுறைக்குட்பட்டு இயக்கப்படுகிறதா? என்று போக்குவரத்து அலுவலா்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனா். கடந்த ஜூலை மாதத்தில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும், விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனா். விதிமுறையை மீறியதாக 1,542 வாகனங்களுக்கு ரூ.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- சேலம் சரகத்தில் உள்ள சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஹெல்மெட் அணியாமல் சென்ற 64 பேர், அதிவேகமாக வாகன ஓட்டிய 281 பேர், அதிக பயணிகள் மற்றும் சரக்குகள் ஏற்றிச்சென்ற 248 பேர், சீட்பெல்ட் அணியாமல் சென்ற 194 பேர், செல்போன் பேசிய படி வாகனம் ஓட்டிய 36 பேர் என போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,542 பேர் சிக்கினர். இதையடுத்து அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. உடனடியாக ரூ.17 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேலும் 134 இருசக்கர வாகனங்கள் உள்பட 209 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக 42 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.