சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிகாரி 16ஆம் தேதி சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிகாரி 16-ஆம் தேதி சாட்சியம் அளிக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் அங்கு உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சட்டவிரோதமாக போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. மேலும் சாத்தான்குளம் போலீஸ் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைதானார்கள். அவர்கள் தற்போது வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் பலர் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி தங்களின் சாட்சியத்தை பதிவு செய்துவிட்டனர். இந்த வழக்கில் முதல்கட்டமாக 2,027 பக்கங்களுடன் தயாரான குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சில மாதங்கள் கழித்து 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 104 சாட்சிகள் சேர்க்கப்பட்டன. இதுவரை 51 சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். ஏனையவற்றில் ஆவணங்கள்தான் முக்கியமான சாட்சிகளாக உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக இந்த இரட்டைக்கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என மதுரை ஐகேர்ட்டு பல்வேறு கட்டங்களில் மாவட்ட கோர்ட்டுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த இரட்டைக்கொலை வழக்கை தொடக்க காலத்தில் விசாரித்த சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர் அனில்குமார் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.அன்றைய தினம், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தவருமான சி.பி.ஐ. அதிகாரி விஜயகுமார் சுக்லா, 52-வது சாட்சியாக ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். முன்னதாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி ஆஜராகி சாட்சியம் அளித்தபோது, ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் தாக்கியதால்தான் அவர்கள் படுகாயங்களுடன் இறந்தனர் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.