பட்டாக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கிராம மக்கள் கோரிக்கை!
ஓட்டப்பிடாரம் தாலுகா கீழமங்கலம் வருவாய் கிராமத்தின் நத்தம் பட்டாக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அளவில் அனைத்து தாலுகாக்களிலும் நத்தம் பட்டாக்கள் தமிழ் நிலம் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் இப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் நத்தம் பட்டா நகல் பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் நிலை உள்ளது. கீழமங்கலம் வருவாய் கிராமத்தினுடைய நத்தம் பட்டா பதிவேடு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் கிராம மக்கள் நத்தம் பட்டா நகல் பெற சிரமப்பட்டு வருகின்றனர். கீழமங்கலம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கப்பிகுளம் கிராமத்தில் உள்ள 48 குடியிருப்புகள் 1994 - 95 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேற்படி குடியிருப்புகள் கிராம கணக்குகளில் இடம்பெறாமல் இருந்ததால் கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் மீண்டும் நில அளவை செய்து பட்டா வழங்கியது. கிராம கணக்குகளையும் அந்த வீடுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருவாய் கிராமத்தின் நத்தம் பட்டாக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாதாலும் இது சம்பந்தமான பதிவேடுகள் அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாததாலும் கிராம மக்கள் நத்தம் பட்டா நகல் பெற சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி கீழமங்கலம் வருவாய் கிராமத்தின் நத்தம் பட்டாக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் துரித நடவடிக்கை எடுக்க கப்பிகுளம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.