நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேரிடம் பணம், செல்போன்கள் பறித்த 2 பேர் கைது
போலீசார் நடவடிக்கை
சேலம் கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 35). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,100, ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதேபோல அன்னதானப்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (45). இனிப்பு கடை ஊழியர். இவர் நெத்திமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை வழிமறித்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,500, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மருகாலம்பட்டியை சேர்ந்த பார்த்திபன் (20), சேலம் தாதகாப்பட்டி பிரசாந்த் (23) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளி தனுசை போலீசார் தேடி வருகின்றனர்.