யூனியன் பட்ஜெட் 2026 – கண்ணோட்ட கலந்துரையாடல்: டிரினிடி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது
நாமக்கல்: டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையினால், குயிஸ் கிளப் மற்றும் புத்தாக்க மையத்தின் பங்களிப்புடன் ‘;
யூனியன் பட்ஜெட் (2026) – ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான எம். சசிகலா, யூனியன் பட்ஜெட்டின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், மகளிர் மேம்பாட்டிற்கு இந்த பட்ஜெட் எவ்வாறு துணை புரிகிறது என்பதையும் அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை மற்றும் குயிஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜி. சத்ய சங்கரி, பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை, இளைஞர் மேம்பாடு, மகளிர் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, ‘விக்சித் பாரத்’ மற்றும் ‘அட்மனிர்பார் பாரத்’ போன்ற முக்கிய அம்சங்களை விளக்கமாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு பிகாம் மாணவி எஸ். சௌமியா, சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், வணிகர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது உரையில் பேசினார். நிகழ்ச்சியில் குயிஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஏ. லதா, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் எஸ். தேவி, எம். உமாமகேஸ்வரி, எம். ராஜபத்மாவதி, ஏ. ராஜேஸ்வரி, பி. மதுப்ரியா, பி. தனுஷ்யா உள்ளிட்டோர் மற்றும் பிகாம், பிகாம் சிஏ, எம்.காம் பாடப்பிரிவு மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.