சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் 2027 டிசம்பரில் முடிவடையும்!-கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
தற்போதைய பணிகள் 38.64% நிறைவடைந்துள்ளதாகவும், வரும் 2027 டிசம்பர் மாத இறுதியில் இப்பணிகள் முடிவடையும்
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது இக்கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். கூட்டத்தில், தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்தின் தற்போதைய நிலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் பணிகள் எப்போது நிறைவடையும். இத்திட்டத்திற்காக அரசு மேற்கொண்ட மொத்த செலவு மற்றும் திட்டத்தை கண்காணித்து உரிய நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக ஒன்றிய அமைச்சர் டோகன் சாஹு, 118.9 கி.மீ பாதை நீளம் கொண்ட சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்டத்திற்கான தொகை ரூ. 63,246 கோடிகள் ஆகும். தற்போதைய பணிகள் 38.64% நிறைவடைந்துள்ளதாகவும், வரும் 2027 டிசம்பர் மாத இறுதியில் இப்பணிகள் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.மேலும் மத்திய அரசு மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை இத்திட்டத்தை செயல்படுத்தும் சிறப்பு நோக்க நிறுவனம் முன்வைக்கும் நிதி தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என பதிலளித்தார்.