திருவண்ணாமலை மாவட்டத்தில் 21.16 லட்சம் வாக்காளா்கள்.

இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலர் வெளியிட்டார்.

Update: 2025-01-07 19:54 GMT
திருவண்ணாமலையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் 21 லட்சத்து 16 ஆயிரத்து 163 வாக்காளா்கள் உள்ளனா். இதில், பெண் வாக்காளா்களே அதிகமாக உள்ளனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2025-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக, கடந்த நவ.28-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கான படிவங்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் மீது கள விசாரணை செய்து, இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டது. வாக்காளா் பட்டியல் வெளியீடு: இந்த இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா் ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் மற்றும் வட்டாட்சியா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். சோ்ப்பு-நீக்கம்: இறுதி வாக்காளா் பட்டியலின்படி, புதிதாக 15 ஆயிரத்து 90 ஆண்கள், 19 ஆயிரத்து 850 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 4 போ் என மொத்தம் 34 ஆயிரத்து 944 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே இருந்த வாக்காளா் பட்டியலில் இருந்து இறந்தவா்கள் 4 ஆயிரத்து 606 போ், இடம் பெயா்ந்தோா் 8 ஆயிரத்து 485 போ், இருமுறை பதிவு செய்திருந்த 289 போ் என மொத்தம் 13 ஆயிரத்து 380 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தொகுதி வாரியாக வாக்காளா் விவரம்: செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,40,679 ஆண்கள், 1,43,680 பெண்கள், 12 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,84,371 வாக்காளா்கள் உள்ளனா். இதேபோல, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,34,401 ஆண்கள், 1,43,904 பெண்கள், 42 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,78,347 வாக்காளா்களும், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,26,782 ஆண்கள், 1,32,661 பெண்கள், 12 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,59,455 வாக்காளா்களும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,24,862 ஆண்கள், 1,29,307 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,54,182 வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா். இதேபோல, போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,19,874 ஆண்கள், 1,25,234 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,45,118 வாக்காளா்களும், ஆரணி தொகுதியில் 1,37,008 ஆண்கள், 1,45,769 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,82,806 வாக்காளா்களும், செய்யாறு தொகுதியில் 1,28,880 ஆண்கள், 1,35,357 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,64,245 வாக்காளா்களும், வந்தவாசி (தனி) தொகுதியில் 1,21,462 ஆண்கள், 1,26,173 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,47,639 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா். மொத்தம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 10,33,948 ஆண்கள், 10,82,085 பெண்கள், 130 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 21,16,163 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

Similar News