மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23 மற்றும் 24வது பட்டமளிப்பு விழா
பட்டம் பெற்ற மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்ட னர்
மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23 மற்றும் 24வது பட்டமளிப்பு விழாக்கள் நடைபெற்றன. கல்லூரி செயலர் .முனைவர் பி.அசோக்குமார் பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குனர் பொறியாளர் அ.சக்தி பிரனேஷ் ,கல்விப் புலத் தலைவர் செந்தூர் பிரியதர்ஷினி கலைப்புலத் தலைவர் முனைவர். சுகந்தி ஆகியார் முன்னிலை வகித்தனர் . கல்லூரி முதல்வர் உமா பாஸ்கர் கல்லூரி அறிக்கையினைச் சமர்ப்பித்தார் . காலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் K.கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பாரதியார் மற்றும் பாரதிதாசன் வரிகளை உதாரணம் காட்டி பேசினார். மேலும் ஒரு பெண் கல்வி கற்றால் அந்த நாடே உயரும் என்றும் பேராற்றல் உடைய பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்றும் பெண்களின் பெருமையைக் கூறி மாணவர்கள் மனதில் பதியும்படி பேசிச் சென்றார் . தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் இராமச்ந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாணவியர் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டுமென்றும் அந்த இலக்கு உயர்கல்வியை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கற்ற கல்வியைப் பயன்படுத்தி சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பட்டம் பெற்ற மாணவியர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறிச் சென்றார். பட்டம் பெற்ற மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்ட னர் இரண்டு பட்டமளிப்பு விழாக்களிலும் 1500க்கும் மேற்பட்ட மாணவியர் பட்டம் பெற்றுச் சென்றனர். துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் விழா சிறக்க பெரும் பங்காற்றினர்.