அரக்கோணத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றம்
அரக்கோணத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரம் வரை தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - சோளிங்கர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் வரை அதாவது சோளிங்கர் போடப் பாறை என்ற இடம் வரை சாலையின் இருபுறமும் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அரக்கோணம் கோட்ட நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக அரக்கோணம் அடுத்த கும்பினிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் அதிகம் பேர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வீடு மற்றும் கடைகளுக்கு முன்பாக உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றி வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சாலையின் இருபுறமும் அவரவர் வீடு , கடை முன்பாக விருப்பத்திற்கு மண்ணை கொட்டி உயரம் ஏற்றியுள்ளனர். இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது . மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடம் இல்லாமல் உள்ளது. அதனால் ஒரே சீராக சாலைகள் இருக்கும் வகையில் மேடான பகுதிகள் இடித்து சமன் படுத்தப்படுகிறது . இந்த பணி 25 கிலோமீட்டர் தூரம் வரை நடக்கிறது என்றனர்.