சேலம் செவ்வாய்பேட்டையில் ஜெயின் கோவிலில் 25 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை
போலீசார் விசாரணை
சேலம் செவ்வாய்பேட்டை ருத்ரப்பன் தெருவில் வட மாநிலத்தினர் வழிபடும் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலையில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். மாலையில் கோவில் பூட்டப்படுவது வழக்கம். இந்த பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தினமும் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் பெண்கள் சிலர் வழிபடுவதற்காக கோவிலுக்கு வந்தனர். அப்போது, கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் உள்பட 25 கிலோ எடையிலான வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் உடைத்து ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபரின் கைரேகைகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த ஒருவர் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து செல்வது பதிவாகி உள்ளது. மொத்தம் 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாகவும், அதன் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருப்பதால் அதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.