விருத்தாசலத்தில் கெட்டுப்போன 35 கிலோ மீன்கள் அழிப்பு
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை;
விருத்தாசலம் நகராட்சி பகுதியில் உள்ள மீன் அங்காடிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்த மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி . கே. கைலாஷ் குமார் அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்ல தம்பி, பாலாஜி ஆகியோரும் மீன் வளத்துறையை சேர்ந்த மீன்வள ஆய்வாளர் வர்ஷா அவர்களும் இணைந்து அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள மீன் மார்க்கெட், ஆலடி ரோட்டில் உள்ள மீன் அங்காடி பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் கெட்டுப்போன 35 கிலோ மீன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றும், ரசாயனம் கலந்த மீன்களை விற்கக் கூடாது என மீன் வியாபாரிகளை எச்சரித்தனர். ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்யப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து கெட்டுப்போன மீன் விற்ற இரண்டு கடைகளுக்கு தலா ரூபாய் 2000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.