பிச்சை பாத்திரம் வழங்குவதா? கனிமொழி எம்.பி கேள்வி!.
மாநிலங்களின் கல்வி உரிமை குறித்து மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியுள்ளார்.
மாநிலங்களின் கல்வி உரிமையை பறிப்பது, மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடிங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது என்று மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசினார்..
மக்களவையில் தமிழில் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, ''ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு குறைத்து கொண்டே வருகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். மாநில அரசுகள்தான் கல்விக்காக 50% நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் என கூற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்? மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடிங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தான். தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். மதிய உணவு திட்ட நிதியை ஒன்றிய அரசு குறைத்தது ஏன்? குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளது. இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது ஒன்றிய அரசு. குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?'' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.