கருமத்தம்பட்டியில் 384வது ஆண்டு ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா கோலாகலம் !
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட தேர்ப் பவனி: பக்திப் பரவசத்தில் பக்தர்கள்.;
கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித ஜெபமாலை அன்னை திருத்தலத்தில் 384வது ஆண்டு தேர் பவனி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி, ஆலயம் வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஜெபமாலை மாதா திருவுருவம் வைக்கப்பட்டு, பக்திப் பாடல்கள் முழங்க திருத்தலச் சாலைகளில் பவனி வந்தது. திரளான பக்தர்கள் பிரார்த்தனை செய்து தேரைப் பின்தொடர்ந்தனர். மேலும், திருவிழா வளாகத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்ததால், திருவிழாச் சந்தையின் உற்சாகமும் களைகட்டியது.