இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
குமாரபாளையம் அருகே இரு வேறு திருட்டுகளில் சம்பந்தப்பட்ட நான்கு பேர் கைது 11 பவுன் நகை பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மதிவதனி, (29). இவரது கணவர் அம்சமணி, (37). பெருந்துறை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆக. 1, காலை 09:30 மணியளவில் அம்சமணி வேலைக்கு போக, குழந்தைகள் பள்ளிக்கு போக, மாமனார் சுப்பிரமணி, (65), மாமியார் செல்லம்மாள், (62), இருவரும உறவினர் துக்க வீட்டிற்கு சென்றனர். மதிவதனி மாடுகள் மேய்க்க சென்றார். காலை 11:00 மணியளவில் மாமியார் செல்லம்மாள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் போது, கிரில் கதவு, வீட்டின் கதவு திறந்த நிலையிலும் இருந்தது கண்டு அதிர்சியடைந்தார். இது குறித்து மதிவதனிக்கு தகவல் தர வீட்டின் உள்ளே சென்ற இருவரும், பீரோ திறந்து கிடப்பதையும், துணி,மணிகள் சிதறி கிடப்பதையும் கண்டனர். கட்டிலின் அடிப்பகுதியில் வைத்த 7 ¾ பவுன் தங்க தாலிக்கொடி, சாமி படத்தின் பின்புறம் வைத்திருந்த 8 ஆயிரம் ரொக்கம், கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகியன திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மதிவதனி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதே போல், குமாரபாளையம் அருகே சிவசக்தி நகரில் வசிப்பவர் ராஜா, (34). தேங்காய் வியாபாரம். இவரும், இவரது மனைவியும், ஆக. 3ல் காலை 09:30 மணியளவில் சேலம் சென்றனர். இவரது பெற்றோர்கள் வீட்டை பூட்டிவிட்டு காலை 10:00 மணியளவில் பள்ளிபாளையம் சென்று விட்டு மாலை 03:30 மணியளவில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும, உள்ளே பீரோ போட்டு உடைக்கப்பட்டும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் தங்க மோதிரங்கள், டாலருடன் கூடிய செயின், வளையல், கம்மல், ஆகிய ஐந்தரை பவுன் தங்க நகைகளும், பணம் 80 ஆயிரமும் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில், குமாரபாளையம் காவேரி நகர் செக் போஸ்ட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாகும் வகையில் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்த போது, இரண்டு திருட்டு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபர்கள் இவர்கள்தான் என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் வேலூரை சேர்ந்த மணிகண்டன், (47), சிதம்பரத்தை சேர்ந்த பிரபு, (26), நாமக்கல் மாவட்டம், செருக்கலையை சேர்ந்த மணி (எ) கோவில்மணி, (38), திருப்பதியை சேர்ந்த குமார், (32), என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்ததுடன், நால்வரையும் குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையம் திருட்டு வழக்கில் கைதான நால்வரில் மணிகண்டன் என்பவருக்கு மாநிலம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட வழக்குகளும், கோவில்மணி என்பவருக்கு 150க்கும் மேற்பட்ட வழக்குகளும், பிரபு என்பவருக்கு 100க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. இவர்கள் கோவை, சேலம் சாலையில் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளாக பார்த்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.